ரூ.19.58 கோடியில் புதிய கல்வி அரங்கம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி ஸ்டாலின்
பாரதி மகளிர் கல்லூரியில் புதிய கல்வி அரங்கம் அமைப்பதற்கான பணியினை உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி பயில தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றார். அதனடிப்படையில் வடசென்னையில் உள்ள பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவிகளின் மேற்படிப்பிற்கு உதவும் வகையில் விளங்கிக் கொண்டிருக்கும் பிராட்வே, பிரகாசம் சாலை பாரதி மகளிர் கல்லூரியில் 25.00 கோடி ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் அறைகள் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட மூன்றடுக்கு கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை கடந்த 22.8.2024 அன்று தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, பாரதி மகளிர் கல்லூரி மாணவிகளின் கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் திறன் வளர்ச்சிக்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25,000 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய நவீன "கல்வி அரங்கம்" கட்டப்படவுள்ளது.
இந்த நவீன கல்வி அரங்கம் ஒரே நேரத்தில் 720 நபர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில், முக்கிய பிரமுகர்கள் அறை, கூட்டரங்கம், உள் விளையாட்டுப் பகுதி, சேமிப்பு அறை, மின்சார அறை, நவீன கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
இன்று (8.1.2026) பாரதி மகளிர் கல்லூரியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன "கல்வி அரங்கம்" அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு துணை முல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கான “உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 20 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை
உங்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். Happy New Year! இந்த பாரதி கல்லூரிக்கு எப்போது வந்தாலும், உங்களைச் சந்திக்கும் பொழுது ஒரு புது உற்சாகமும் மகிழ்ச்சியும் தானாகவே வந்துவிடும். அந்த அளவிற்கு எப்பொழுதுமே ஆற்றலோடு இருக்கக்கூடியவர்கள்தான் இந்த பாரதி கல்லூரி மாணவிகள் நீங்கள்.
இந்த கல்லூரிக்கு நான் வருவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது, பலமுறை வந்திருக்கிறேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் பலமுறை சந்தித்திருக்கிறேன். இங்கே எதிரில் இருக்கக்கூடிய கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடத்தை 2024-ஆம் ஆண்டு நான்தான் திறந்து வைத்தேன். அது எனக்குக் கூடுதல் சிறப்பு, பெருமை.
அதுமட்டுமல்ல, சரியாக ஒரு 12 நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வருகை தந்திருந்தேன். பிரகாசம் சாலையில் அமைய இருக்கக்கூடிய முதல்வர் படைப்பகம் மற்றும் நூலக கட்டிடப் பணிகளை நான்தான் துவங்கி வைத்தேன். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாணவிகள், சகோதரிகள் நிறையபேர் உங்கள் அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டீர்கள். இந்த கலைஞர் நூற்றாண்டு கட்டடம் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று நன்றி தெரிவித்து, மிகவும் பெருமையாக பேசினீர்கள். அதே நேரத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தீர்கள்.
என்னைப் பொறுத்தவரைக்கும் மாணவிகள் நிறைய பேர் சிறப்பாக படிக்கிறார்கள் என்பதுதான் கலைஞர் நூற்றாண்டு கட்டடத்திற்கு மிகப் பெரிய ஒரு பெருமை. அதன்பின்பு ஒரு வேண்டுகோள் வைத்தீர்கள். உங்கள் கல்லூரிக்கு ஒரு ஆடிட்டோரியம் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தீர்கள். அதை கண்டிப்பாக நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். நானும் மறக்கவில்லை. அதனால்தான் உடனே நம்முடைய அமைச்சர் அண்ணன் சேகர்பாபுவிடம் நியாபகப்படுத்தி அதை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று, இன்றைக்கு உங்கள் கல்லூரிக்கே வந்து நீங்கள் கேட்ட ஆடிட்டோரியத்திற்கு அடிக்கல் நாட்டி, அந்த பணிகளை தொடங்கியிருக்கின்றோம்.
அமைச்சரிடத்திலும், அதிகாரிகளிடத்திலும் எவ்வளவு நாட்களில் அந்த ஆடிட்டோரியம் தயாராகும் என்று கேட்டேன். குறைந்தது 4 மாதத்திற்குள் எப்படியாவது கட்டிக் கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் நான்கு மாதங்களில் உங்களுக்கான அந்த ஆடிட்டோரியம் இங்கே இருக்கும். உங்களுக்கு இன்னும் பல நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொங்கல் விழா என்றாலே தமிழ்நாடு முழுவதும் ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும், மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அதுவும் கல்லூரி வளாகம் என்றால் அதை கேட்க தேவையேயில்லை. உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்குகின்ற வகையில்தான், நம்முடைய முதல்-அமைச்சர், நம்முடைய அரசு இன்றைக்கு உங்களுக்கு லேப்டாப் வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியையும் சேர்த்து நடத்தியிருக்கின்றோம்.
இன்றைக்கு 20 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கி இருக்கின்றோம். விரைவில் கடைசி ஆண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த வருடம் மட்டும் முதல்-அமைச்சர் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெண்களின் கைகளில் இருந்து, கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். ஆனால் நம்முடைய தலைவர் புத்தகத்தை மட்டுமல்ல, கூடவே இன்றைக்கு லேப்டாப்பையும் சேர்த்து கொடுத்திருக்கிறார். ஏனென்றால் பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர் நம்முடைய முதல்-அமைச்சர்.
ஒரு ஆண் படித்து வந்தால், அவனுக்கு மட்டும்தான் அது பயனாக இருக்கும். ஆனால், அதே ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், அந்த குடும்பமே படித்த மாதிரி, அந்த குடும்பத்திற்கே அது பயனாக இருக்கும்.
அப்படிப்பட்ட பெண்களுடைய கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்றுதான் நம்முடைய முதல்-அமைச்சர் புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது அரசு பள்ளியில் படித்து, எந்த கல்லூரியில் படித்தாலும் அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதம் 1,000 ரூபாய் நான் தருகிறேன் என்று முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார்.
இந்த பாரதி கல்லூரியில் மட்டும் புதுமைப் பெண் திட்டம் மூலமாக கடந்த 4 வருடங்களில் மட்டும், 3,000 மாணவிகள் பயன்பெற்றுள்ளார்கள். இது மிகப் பெரிய ஒரு சாதனை. அதுமட்டுமல்ல, நான் முதல்வன் திட்டம் மூலமாக உங்களை மாதிரி மாணவிகளுக்கு வேலை வாய்ப்பையும் நம்முடைய அரசு ஏற்படுத்தி தருகிறது. இந்த கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் நான் முதல்வன் திட்டத்தின் பல்வேறு திறன் பயிற்சிகளை பெற்று பயனடைந்து இருக்கின்றீர்கள். குறிப்பாக 1,400 மாணவிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து பணியையும் உறுதி செய்திருக்கிறது நம்முடைய அரசு, நம்முடைய முதல்-அமைச்சர்.
இப்போது உங்களுடைய கல்விக்கு மேலும் உதவுவதற்காக நம்முடைய முதல்-அமைச்சர் லேப்டாப் கொடுத்திருக்கிறார்கள். இந்த கல்லூரியில் மட்டும் 1,180 மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட இருக்கிறது. இன்றைக்கு முதற்கட்டமாக 20 மாணவிகளுக்கு கொடுத்திருக்கின்றோம். ஆகவே, நிச்சயம் இந்த லேப்டாப் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், பெரிய, பெரிய நிறுவனங்களில் உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு அது உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
லேப்டாப்பை நல்லபடியாக பயன்படுத்துங்கள். நிறைய அட்வைஸ் பண்ணுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல, உங்களுடைய ஒவ்வொரு பொழுதையும் சிறப்பாக ஆக்க வேண்டும். எதிர்காலத்தை வலிமையாக ஆக்க வேண்டும் என்றுதான் நம்முடைய முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
இதில் நிச்சயம் படமும் பார்ப்பீர்கள். நிச்சயம் கேம்ஸ் விளையாடுவீர்கள். அதற்காக மட்டுமே இந்த லேப்டாப் கொடுக்கப்பட்டிருக்கிறது கிடையாது. இதை இன்னும் பயனுள்ளதாக, உங்களுடைய படிப்பிற்கு பயனுள்ளதாக நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
திராவிட மாடல் அரசு இப்படி மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து தர இருக்கின்றது. நம்முடைய முதல்-அமைச்சரை பொறுத்தவரைக்கும் உங்களுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும். அது மூலமாக உங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமே முன்னேற வேண்டும். அந்த பெருமையை பாரதி கல்லூரி மாணவிகள் நீங்கள் நிச்சயம் ஏற்படுத்தி தருவீர்கள் என்ற நம்பிக்கை இந்த அரசிற்கும் முதல்-அமைச்சருக்கும் இருக்கிறது.
இப்போது அடிக்கல் நாட்டியிருக்கின்ற, இன்னும் ஒரு குறைந்தது 4 மாதங்களில் இந்த ஆடிட்டோரியத்திற்கான பணிகள் எல்லாம் முடிவடைந்து, நிச்சயம் நீங்கள் அழைத்தீர்கள் என்றால், நானே வந்து அதை உங்கள் முன்னிலையில் திறந்து வைப்பேன். எனவே, உங்களுடைய வளர்ச்சிக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறதோ, அதேபோல் நீங்களும் இந்த அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சொல்லி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். அனைவருக்கும் மீண்டும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை கூறி, விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அ.வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், உயர்கல்வித் துறை செயலாளர் பொ. சங்கர், கல்லூரிக் கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, பாரதி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் டெ.கிளாடிஸ், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.