மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் பலி
ஒரத்தநாடு பகுதியில் காற்றுடன் கனமழை பெய்த போது மின்கம்பி அறுந்து விழுந்தது.;
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது மண்டலக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வடக்கிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆடு, மாடுகளை மேய்ச்சல் பகுதியில் இருந்து வீடுகளுக்கு ஓட்டிச் சென்றனர்.
வடக்கிகோட்டை கீழத்தெரு அருகே ஆடுகள் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென உயர் அழுத்த மின்கம்பி அறுந்து நடந்து சென்ற ஆடுகள் மீது விழுந்தது. இதில் வடக்கிகோட்டை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளும், நடராஜனுக்கு சொந்தமான 4 ஆடுகளும் மின்சாரம் தாக்கி இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் இறந்ததால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிட்டதாகவும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.