13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update:2025-07-03 19:48 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, நேற்று மாலை பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

மு.க. ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. 13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருப்பது என்பது, காவல்துறையை நிர்வகிக்க வேண்டிய பொம்மை முதல்வருக்கு உறுத்தவில்லையா?

மாணவர்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவர்கள் இடையே எப்படி இவ்வளவு வன்முறை உணர்வு வருகிறது? அடிப்படையிலேயே Flawed அரசாக இந்த தி.மு.க. அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

"இன்று என்ன போட்டோஷூட் எடுக்கலாம்?" என்பதில் மட்டும் இருக்கும் சிந்தையை, "இன்று எப்படி முறையாக அரசை நிர்வகிக்கலாம்?" என்பதில் மாற்ற வேண்டும் என பொம்மை முதல்வரை கேட்டுக்கொள்வதோடு, மேற்கூறிய சம்பவங்களில் குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்