27 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முக்கிய ஊர்களில் நின்று செல்ல அனுமதி

பல்வேறு வழித்தடங்களில் செல்லும் ரெயில்கள், குறிப்பிட்ட சில ஊர்களில் நின்று செல்வதற்கு தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.;

Update:2026-01-23 06:56 IST

சேலம்,

தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் மற்றும் புதிய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில குறிப்பிட்ட ஊர்களில் ரெயில்கள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், எனவே, பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று சில இடங்களில் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று சேலம் வழியாக செல்லும் முக்கிய ரெயில்களும், மேலும் பல்வேறு வழித்தடங்களில் செல்லும் ரெயில்களும் குறிப்பிட்ட சில ஊர்களில் நின்று செல்வதற்கு தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, கோவை- சென்னை சென்டிரல் (வண்டி எண்-12676) வருகிற 26-ந் தேதி முதல் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இரவு 9.48 மணிக்கு வந்து நிற்கும். அதன்பிறகு 2 நிமிடங்கள் கழித்து 9.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல், மங்களுரு-சென்னை சென்டிரல் (வண்டி எண்-12686) வருகிற 26-ந் தேதி முதல் பெரம்பூர் ரெயில் நிலையத்திலும், திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெரம்பூர் ரெயில் நிலையத்திலும், சேலம்-அரக்கோணம் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16088) மேல்பட்டி ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

மேலும், சென்னை சென்டிரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16089) அம்பத்தூர் ரெயில் நிலையத்திலும், காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் கொடுமுடி ரெயில் நிலையத்திலும், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16339) இனிமேல் ஜோலார்பேட்டையிலும், நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டையிலும் நின்று செல்லும். அதேபோல், கச்சிக்குடா-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16353) பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராசிபுரத்திலும், கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16526) வருகிற 26-ந் தேதி முதல் திருப்பூரிலும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-22667) சாத்தூரிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முக்கிய ஊர்களில் நின்று செல்வதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்