5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.;
கோப்புப்படம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெட்டபஞ்சானி பகுதியை சேர்ந்த மகபூப்ஷெரீப் மகன் காலேஷா (23 வயது). இவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து கடைகளுக்கு சாம்பிராணி போடும் வேலை செய்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலேஷா ஒரு கடையில் சாம்பிராணி புகை போடுவதற்காக சென்றார். அந்த கடையின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த வாடிக்கையாளர் பெண் ஆகியோர் அந்த புகை பிடிக்காது என்று வெளியே சென்றனர்.
கடையின் உள்ளே அந்த பெண்ணின் 5 வயது மகள் செல்போன் பார்த்து கொண்டிருந்தாள். காலேஷா கடை முழுவதும் சாம்பிராணி புகை போட்டு விட்டு அந்த சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதைக் கண்ட சிறுமியின் தாய் மற்றும் கடை உரிமையாளர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து காலேஷாவை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் இந்திரா மிசேல் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காலேஷாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மேலும் அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து காலேஷாவை பலத்த காவலுடன் போலீசார் வேனில் ஏற்றி வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.