பணக்கார மாநகராட்சி பா.ஜனதா வசம்
ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதா பக்கம் தாவி ஆட்சி அமைத்து முதல்-மந்திரி ஆனார்.;
இந்தியாவின் நிதித் தலைநகராக மட்டுமல்லாமல், பணக்கார மாநகராட்சியாகவும் விளங்குவது மும்பை மாநகராட்சியாகும். நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டித் தரும் மும்பை மாநகராட்சியின் ஆண்டு பட்ஜெட் ரூ.74,427 கோடியாகும். அடுத்து பெங்களூரு மாநகராட்சியின் பட்ஜெட் அளவு ரூ.19,927 கோடியாகவும், சென்னை ரூ.16,671 கோடியாகவும், டெல்லி ரூ.16,530 கோடியாகவும், கொல்கத்தா ரூ.8,450 கோடியாகவும் உள்ளது. ஆக பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா ஆகிய 4 மாநகராட்சிகளின் பட்ஜெட் தொகையை கூட்டினாலும் மும்பை பட்ஜெட் அளவுக்கு பக்கத்தில் கூட வர முடியவில்லை. சமீபத்தில் மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. முதல் கட்டமாக நகராட்சிகள், பேரூராட்சிகள் என 288 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
இதில் பா.ஜனதா, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) உள்ளிட்ட 8 கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி 207 நகராட்சிகள், பேரூராட்சிகளை கைப்பற்றியது. அடுத்து கடந்த 15-ந் தேதி 29 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலிலும் மகாயுதி கூட்டணி மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகளில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை மாநகராட்சியில் தங்கள் கொடி பறக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் நீண்டகால கனவாகும். அது இப்போது நிறைவேறியுள்ளது.
25 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை பெருமையோடு தங்கள் கைவசம் வைத்திருந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி, தனது சகோதரர் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. அதே போல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (எஸ்.பி.) படுதோல்வி அடைந்தன.
மும்பை மாநகராட்சியில் உள்ள 227 இடங்களில் பா.ஜனதா 89 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 29 இடங்களிலும் வெற்றி பெற்று மாநகராட்சியை தன்வசப்படுத்தியுள்ளன. இந்த வெற்றிக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காய்களை நகர்த்திய சாதுர்யமும் முக்கிய காரணம். சிவசேனா கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே அந்தக் கட்சியை இரண்டாகப் பிரித்து வெளியேறியதால் 2022-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவின் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதா பக்கம் தாவி ஆட்சி அமைத்து முதல்-மந்திரி ஆனார். துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார். பின்னர் 2024-ல் நடந்த மராட்டிய சட்டசபை தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அடங்கிய பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகின்றனர்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் 16 இடங்களில் தான் வெற்றி பெற்றது. ஆக, இப்போது மொத்த மராட்டியமே பா.ஜனதாவின் கோட்டையாகிவிட்டது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று சொல்லி வந்த பிரதமர் நரேந்திர மோடி, இப்போது காங்கிரஸ் இல்லாத மராட்டிய மாநிலத்தை, குறிப்பாக மும்பையை உருவாக்கிவிட்டார்.
1990-ல் இருந்து ஒவ்வொரு முதல்-மந்திரியும் மும்பையை சிங்கப்பூராக்குவோம் என்று சூளுரைத்தாலும், மும்பை குடிசைகள் அதிகமாக இருக்கும் மாநகராகவே இருக்கிறது. ஆசியாவிலேயே பணக்கார நகராக இருக்கும் மும்பையை பா.ஜனதா சிங்கப்பூரைப் போலவோ, ஷாங்காய் நகரைப் போலவோ ஆக்க வேண்டும் என்பதே மராட்டிய மக்களின் ஆசையாகும்.