சென்னை கோட்டத்தில் 2-வது புதிய சரக்கு ரெயில் முனையம் தொடக்கம்

சென்னை கோட்டத்தில் 2-வது புதிய சரக்கு ரெயில் முனையம் தொடங்கப்ப்ட்டுள்ளது.;

Update:2025-12-05 01:24 IST

சென்னை,

மத்திய அரசின் ‘கதி சக்தி' திட்டத்தின் கீழ், ரெயில்வேயில் தனியார் பங்களிப்போடு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சரக்குகளை கையாளும் வகையில், ரெயில்வே ஷெட்டுகள் அமைப்பது, புதிய சரக்கு முனையம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் ஒரு சரக்கு ரெயில் முனையம் பயன்பாட்டிற்கு உள்ளது.

இந்தநிலையில், பொன்னேரிக்கு அருகில் உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில், 2-வது புதிய சரக்கு ரெயில் முனையம் ரூ.70 கோடியில் அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் இருந்து தென்கிழக்கு ரெயில்வேயின் கிரீன் பீல்ட் தனியார் சரக்கு முனையத்துக்கு 45 பெட்டிகள் கொண்ட முதல் சரக்கு ரெயில் சேவையைத் தெற்கு ரெயில்வேயின் கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளர் வினயன், சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் உள்பட பலர் பங்கேற்றனர். 1,389 கிலோ மீட்டர் துாரம் சென்று வரும் இந்த ரெயில் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.14.80 லட்சம் வருவாய் கிடைக்கும். இந்த புதிய சரக்கு ரெயில் முனையத்தில், மாதம் 21 சரக்கு ரெயில்களை கையாளும் வகையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கன்டெய்னர்கள், உணவு தானியங்கள், சிமெண்ட், இரும்பு மற்றும் எக்கு உள்பட பல்வேறு வகையான சரக்குகளை கையாளும் வசதிகள் உள்ளன. சரக்கு போக்குவரத்து திறனை கணிசமாக உயர்த்துவதுடன், இப்பகுதியின் முக்கிய தளவாட மையமாக மாறும். மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்