கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.;
கடந்த 2017-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் அந்தோணி சூசைராஜ் (வயது 50) என்பவரை கம்பால் அடித்து கொலை செய்த வழக்கில் அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் அந்தோணி லிவிங்ஸ்டன்(32) மற்றும் சிங்கராயன் மகன் அன்றோ(எ) அன்றோ வியானி(38) ஆகிய 2 பேரையும் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் இன்று (4.12.2025) குற்றவாளிகள் அந்தோணி லிவிங்ஸ்டன், அன்றோ(எ) அன்றோ வியானி ஆகிய 2 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் பரணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.