மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு: 24-ந்தேதி வரை நடக்கிறது
வருகிற 19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.;
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்த நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில் நிரம்பாத, தேர்வு செய்து அதில் சேராத காலி இடங்களுக்கு மறுகலந்தாய்வு நடத்தப்படுகிறது.
மேலும் நடப்பாண்டில் 2 சுயநிதி கல்லூரிகள், 2 மாநில தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு தலா 50 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. கடந்த வாரத்தில் மாநிலத்தின் 3 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் தலா 50 இடங்கள் புதியதாக சேர்க்கப்பட்டு இருந்தன.
அந்த வகையில் தமிழ்நாட்டு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கூடுதலாக 350 இடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 2 சுயநிதி கல்லூரிகள் தங்களுக்கான இடங்களுக்கு அங்கீகாரத்தை 19-ந்தேதிக்குள் பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
2-ம் கட்ட கலந்தாய்வுக்கான பதிவு நேற்று தொடங்கிய நிலையில், வருகிற 19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. 23-ந்தேதி இடங்களை தேர்வு செய்வதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு, 24-ந்தேதி இறுதி முடிவு வெளியிடப்படும். இடங்களை பெற்றவர்கள் 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேரவேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வில் இடங்களை தேர்ந்தெடுத்து கல்லூரிகளில் சேர்ந்தவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.