உணவு ஊட்டியபோது மூச்சு திணறி 3 வயது குழந்தை உயிரிழப்பு
உணவு ஊட்டியபோது மூச்சு திணறல் ஏற்பட்டு 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த கனகலிங்கத்தின் மகன் கார்த்திக் (35 வயது). இவரது மனைவி தாரணி (30 வயது). இவர்களுக்கு சைலேஷ் (3 வயது) என்ற மகன் இருந்தான். தாரணி மீண்டும் கர்ப்பமான நிலையில், 2-வது பிரசவத்திற்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார்த்திக் மருத்துவமனையில் இருந்து தாரணியை கவனித்து வருகிறார்.
இதனால் சைலேஷ் தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ளான். நேற்று கார்த்திக்கின் தங்கை அட்சயா ஸ்ரீ, சைலேசுக்கு உணவு ஊட்டியதாக கூறப்படுகிறது. அப்போது சைலேசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சைலேசை பரிசோதித்த மருத்துவர்கள்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.