அரசு பள்ளிகளில் 3.12 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்க்கை
மாணவ-மாணவிகளுக்கான நலத்திட்டங்களை அரசு விரிவுப்படுத்தி வருகிறது.;
சென்னை,
அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிலும் அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கடி சொல்லி வருகிறார். அதற்கேற்றாற்போல், மாணவ-மாணவிகளுக்கான நலத்திட்டங்களையும் அரசு விரிவுப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு பள்ளிகளில் ஆரம்பத்தில் இருந்தே மாணவர் சேர்க்கை ஆர்வமுடன் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று வரையிலான தகவலின்படி, மழலையர் வகுப்புகளில் 22 ஆயிரத்து 757 பேரும், 1-ம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 676 பேரும், ஆங்கில வழிக் கல்வியில் 52 ஆயிரத்து 57 பேரும், 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 65 ஆயிரத்து 391 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 881 மாணவ-மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் இதுவரை சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.
இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 985 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கடுத்தபடியாக செங்கல்பட்டு (9,528 பேர்), திருப்பூர் (9,385), சேலம் (8,573), தென்காசி (8,019) போன்ற மாவட்டங்கள் வருகின்றன. கடந்த ஆண்டு 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்த மாதம் இறுதி வரையில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் இருக்கும் சூழலில், கடந்த ஆண்டு எண்ணிக்கையை விரைவில் கடந்துவிடும் என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசின் நலத்திட்டங்கள், அதிலும் குறிப்பாக திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்), நவீன தொழில்நுட்ப ஆய்வகம், காலை உணவுத் திட்டம் போன்றவை அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.