பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் தங்க சங்கிலி திருட்டு

நாட்டு வைத்தியர் என கூறி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-10-11 19:48 IST

கோப்புப்படம் 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணியை சேர்ந்த ஜெயராமன் மனைவி புவனேஸ்வரி (38 வயது). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த 60 வயது மதிக்கத்தகுந்த முதியவர், தான் ஒரு நாட்டு வைத்தியர் என்று கூறி அறிமுகமாகி உள்ளார். அவரின் வயதான தோற்றத்தை பார்த்து நாட்டு வைத்தியராக இருக்கும் என்று நம்பிய புவனேஸ்வரி தனக்கு சளி தொந்தரவு அதிகமாக உள்ளது என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டுள்ளார்.

சீரகம், விளக்கெண்ணெய், வேப்பிலை ஆகியவற்றை அரைத்து சாப்பிட வேண்டும் என முதியவர் சொல்லி உள்ளார். அவர் கொடுத்த மருந்தை சாப்பிட்ட புவனேஸ்வரி மயங்கி விட்டார். மயங்கிய நிலையில் இருந்த புவனேஸ்வரியை மாலை அவருடைய தாயார் ஞானாம்பாள் வந்து எழுப்பியுள்ளார். எழுந்து பார்த்தபோது முதியவர் சொன்னபடி மருந்தை குடித்து விட்டு அசந்து தூங்கி விட்டதாகவும் என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்றும் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை காணவில்லை. அப்போது தான் நாட்டு வைத்தியர் என்று கூறி அறிமுகமாகிய முதியவர் மயக்க மருந்து கொடுத்து தங்க சங்கிலியை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து புவனேஸ்வரி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புவனேஸ்வரி நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பெண்ணை ஏமாற்றி தங்க சங்கிலியை திருடிச்சென்ற முதியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்