பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்கள்: திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

ஆசிரியர்களை நியமிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-23 09:38 IST

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”தமிழ்நாட்டில் உள்ள 21 மாநில பல்கலைக்கழகங்களில் சுமார் 50% முதல் 65% வரை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. ஆசிரியர்கள் இல்லாததால் உயர்கல்வி நிறுவனங்கள்க்ல் கல்வித்தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களை நியமிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 56% ஆசிரியர் பணியிடங்களும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களில் 40&50% பணியிடங்களும் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் 65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்திலுள்ள 21 பல்கலைக்கழகங்களிலும் சராசரியாக 50% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

சென்னை பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 515 ஆசிரியர் பணியிடங்களில் 180, அதாவது 35% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள 335, அதாவது 65% பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், 94 பேராசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 63 பேர் மட்டுமே உள்ளனர்;127 இணைப் பேராசிரியர்களில் வெறும் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர், மீதமுள்ள 85% பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், 294 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 197 இடங்கள், அதாவது 67% பணியிடங்கள் இன்றைய நிலையில் காலியாக உள்ளன என்று கடந்த திசம்பர் 3&ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தேன். ஆனால், அதற்கு அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகியுள்ள தரவுகளின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 50%க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு திமுக அரசு தான் காரணம்.

கல்லூரிகளுடன் ஒப்பிடும் போது பல்கலைக்கழகங்கள் உயர்ந்தவை என்பது மட்டுமின்றி, முதன்மையானவையும் ஆகும். அதற்குக் காரணம், கல்லூரிகளில் கற்பித்தல் பணி மட்டும் தான் முதன்மையாக மேற்கொள்ளப்படும் நிலையில், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆராய்ச்சிகளை சிறப்பாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றால் அனுபவமும், திறமையும் வாய்ந்த பேராசிரியர்கள் கட்டாயம் தேவை. ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்து காலத்தை ஓட்டுகிறதோ, அதேபோல், 21 அரசு பல்கலைக் கழகங்களிலும் கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்து திமுக அரசு காலத்தைக் கடத்தி வருகிறது.

கவுரவ விரிவுரையாளர்கள் திறமையானவர்களாகவும், தகுதியானவர்களாகவும் இருந்தாலும் கூட அவர்களால் பல்கலைக்கழக பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு மாற்றாக முடியாது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு பொறுப்புடைமை வழங்கப்படவில்லை என்பதால், ஆராய்ச்சி மாணவர்களை வழி நடத்துவது உள்ளிட்ட பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணிகளை அவர்களால் மேற்கொள்ள முடியாது. இதனால், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கின்றன.

சென்னைப் பல்கலைக்கழம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்காக பல்கலைக்கழக நிர்வாகங்களின் சார்பில் கூறப்படும் காரணம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை என்பது தான். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் மாணவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், அந்த நிதி பல்கலைக்கழகங்களின் பிற செலவுகளுக்கு திருப்பி விடப்படுவதால், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களையும், தற்காலிகப் பட்டச் சான்றுகளையும் அச்சடிப்பதற்கு கூட நிதி இல்லை. இப்படியாக பல்கலைக்கழகத்தின் நிதி தேவையற்ற வழிகளில் திருப்பி விடப்படுகின்றன. இவை அனைத்தையும் கடந்து பல்கலைக்கழகங்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் ஆதாரமாக இருந்த தொலைதூரக் கல்வி முறை, பல்கலைக்கழக மானியக் குழுவின் கடுமையான நிபந்தனைகள் காரணமாக முடங்கிக் கிடப்பதால் பல்கலைக்கழகங்களுக்கு சொந்த ஆதாரங்களில் இருந்து வருமானமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு வருவாய் இல்லாத போது, அவற்றுக்கு நிதி வழங்கி உதவ வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை செய்யத் தவறியதால் தான் பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 80% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. கட்டிடங்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களாகி விட முடியாது. ஆசிரியர்கள் தான் உயர்கல்வி நிறுவனங்களின் ஆன்மா ஆவர். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியரைக் கூட நியமிக்காமல் உயர்கல்வி நிறுவனங்களை திமுக அரசு நாசப்படுத்தி உள்ளது. இந்த பாவத்திற்கான தண்டனையை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் அளிப்பார்கள்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்