தி.மு.க.வில் இணையும் முன் வைத்திலிங்கம் வைத்த ஒரே கோரிக்கை..!

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.;

Update:2026-01-23 10:51 IST

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, அவருடைய அமைச்சரவையில் 3-வது இடத்தில் இருந்தவர், வைத்திலிங்கம். தற்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட அவருக்கு பின்வரிசையில் தான் அமர்ந்திருந்தார்.

7 மத்திய மாவட்டங்களின் அ.தி.மு.க. பொறுப்பாளராக இருந்த வைத்திலிங்கம், டெல்டா மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவு, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றது என அ.தி.மு.க. அடுத்தடுத்த பின்னடைவுகளை சந்தித்தபோது, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனால், அ.தி.மு.க.வில் திக்கு தெரியாமல் தவித்தவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர். இந்த நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அவரை கைதூக்கிவிட்டு, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பையும் வழங்கினார். அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவே வைத்திலிங்கம் தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்பட பலர் அ.தி.மு.க.வில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். டெல்டா மாவட்டங்களை சேர்ந்த வைத்திலிங்கத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமியை பின் தொடரத் தொடங்கினார்கள்.

தற்போது, சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முடிவு எடுப்பதில் அவர் தடுமாறியதால், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் முன்பே வெளியேறிவிட்டனர். தற்போது, வைத்திலிங்கமும் வெளியேறி தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

ஆனால், தி.மு.க.வில் இணைய நான் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்று வைத்திலிங்கம் கூறினாலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரை சந்தித்து பேசியபோது, ஒரே கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

அதாவது, தன்னுடைய மகன் பிரபுவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்தால், தி.மு.க.வில் இணைவதாக அவர் உறுதியளித்ததாக தெரிகிறது.

அதன்பிறகு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திரும்பிய செந்தில்பாலாஜி, அவரும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகே மகன் பிரபுவுடன் சென்று தி.மு.க.வில் வைத்திலிங்கம் ஐக்கியமாகி இருக்கிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தனக்காக ஓட்டு கேட்டு சென்ற வைத்திலிங்கம், வரும் தேர்தலில் மகன் பிரபுவுக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு செல்ல தயாராகிவருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்