தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை

காலி இடங்களுக்கு குலுக்கல் முறையில் நேற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.;

Update:2025-11-01 08:10 IST

சென்னை,

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர வழிவகை செய்யப்படுகிறது. அவ்வாறு சேரக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி, மத்திய அரசு நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, அதற்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தாமதமாக தொடங்கியது. ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்தவர்கள், இந்த இடஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை இந்த இடஒதுக்கீட்டில் சேர செய்வது சரியாக இருக்காது என்றெல்லாம் தெரிவித்தனர். இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை அதனை செயல்படுத்த தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, நடப்பாண்டில் 7 ஆயிரத்து 717 மழலையர் மற்றும் தொடக்க, மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 70,449 இடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. இதற்கு 81 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. பள்ளிகளில் காலியாக இருந்த இடங்களுக்கு ஏற்றாற்போல் விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் இடங்கள் நேற்று முன்தினம் ஒதுக்கப்பட்டன. காலி இடங்களை காட்டிலும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதனால், அந்த இடங்களுக்கு குலுக்கல் முறையில் நேற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதன் மூலம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை பொறுத்தவரையில், 4,070 பள்ளிகளில் எல்.கே.ஜி. படிப்பில் 28,077 பேரும், அதில் 4 பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 5 பேரும், மெட்ரிக் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், 3,647 பள்ளிகளில் எல்.கே.ஜி. படிப்பில் 42,273 பேரும், அவற்றில் 21 பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 99 பேரும் என மொத்தம் 70 ஆயிரத்து 449 மாணவ-மாணவிகள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்