அக்காவின் கையை பிடிக்க ஆசையாக ஓடிவந்த 3 வயது குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
பள்ளி சென்று விட்டு, மாலையில் பள்ளி பஸ்சில் திரும்பி வந்த அக்காவை காண குழந்தை ஓடி வந்தாள்.;
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டையை சேர்ந்தவர் ஜான்பாஷா. விவசாயியான அவருக்கு அல்பியா (வயது 6), ஆஷியா (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
தனியார் பள்ளியில் அல்பியா 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று பள்ளி சென்று விட்டு மாலையில் பள்ளி பஸ்சில் அல்பியா திரும்பி வந்தார். தனது அக்காளை பார்த்ததும் ஓடி சென்ற குழந்தை ஆஷியா பஸ்சின் முன்புற சக்கரத்தின் அருகில் சென்றாள். இதை அறியாத டிரைவர் பஸ்சை இயக்கியதால் குழந்தை ஆஷியா, பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், உறவினர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலையில் மறியலில் இடுபட்டனர்.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்..
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.