கோவில் பிரசாதத்தில் கிடந்த பாம்பு குட்டி... பெண் பக்தர் அதிர்ச்சி

கோவில் வளாகத்தில் உள்ள கடையில் பெண் பக்தர் ஒருவர் பிரசாதம் வாங்கினார்.;

Update:2025-05-07 22:58 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த தோவில் வளாகத்தில் உள்ள பிரசாத கடையை திருச்சியை சேர்ந்த நபர் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பெங்களூரு பொம்மசந்திரா பகுதியை சேர்ந்த மதனிகா என்ற பக்தர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் பிரசாதம் வாங்கினார். அதனை திறந்து பார்த்த மதனிகா அதிர்ச்சி அடைந்தார். அதில் பாம்பு குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுபற்றி கடையை ஏலம் எடுத்த நபரிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நடந்தவை குறித்து மதனிகா கோவில் செயல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் செயல் அலுவலர் சாமித்துரை உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதாவது, பிரசாத கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்ததுடன், கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பிரசாத டப்பாவில் பாம்பு குட்டி எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக செயல் அலுவலர் கூறினார். இந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்