நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.;
சென்னை,
மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் தாய்லாந்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அந்த விமானத்தின் கழிவறைக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருப்பதாகவும், விமானம் நடுவானில் வெடித்து சிதற இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பு துண்டித்துள்ளார்.
இதனையடுத்து மும்பை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக இண்டிகோ விமானத்தின் விமானியை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டலை தெரிவித்தனர். இதனையடுத்து விமானி விமானத்தை அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர், அந்த விமானத்தை சூழ்ந்து சோதனைகள் நடத்தினர்.
சோதனையில் விமானத்திற்குள் சந்தேகப்படும் படியான எந்தப் பொருளும் இல்லாததால் இது வழக்கமான புரளி என்று கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து விமானத்தில் சோதனைகள் நடந்து வருகிறது. விமானம் முழுமையாக பரிசோதித்த பின்பு, சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.