பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.;
ராமநாதபுரம்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பிறகு அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன்.
மேலும் மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணங்கினேன். பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மனநிறைவுடன் சென்னைக்குத் திரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“நம்முடைய நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்திருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் நினைவிடத்தில் இன்றைக்கு எங்களுடைய மரியாதையை செலுத்தியிருக்கிறோம்!
பசும்பொன் திருமகனாரின் புகழைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருமையோடு எடுத்துச்சொன்னதை நான் இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.
''அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் மாதிரி, கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர் திருமகன்" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், பசும்பொன் திருமகனாரை மனதார பாராட்டி இருக்கிறார்!
1963-ஆம் ஆண்டு பசும்பொன் திருமகனார் நிறைவெய்தியபோது, பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் அன்று கழகத்தில் இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரும், இந்தப் பசும்பொன்னுக்கு வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
இன்றைக்கு ஏராளமான அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வந்து, பசும்பொன் திருமகனாரின் நினைவைப் போற்றும் இந்த நினைவிடத்தை, 1969-ல் பார்வையிட்டு, 1974-ல் மணிமண்டபமாக உருவாக்கிக் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான். பாம்பன் பாலத்தை கட்டிய நீலகண்டன் தான் இதையும் கட்டியிருக்கிறார்.
அதேபோல், பி.கே.மூக்கையாத்தேவரின் முயற்சியால் அமைக்கப்பட்டு, மதுரையில் கம்பீரமாக நிற்கும் தேவர் சிலை திறப்பு விழாவுக்கு அன்றைக்கு ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியை அழைத்துக் கொண்டு வந்து, அந்த விழாவிற்குத் தலைமை வகித்தவரும் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்தான்.
பசும்பொன் திருமகனாரின் நினைவைப் போற்றக்கூடிய, புகழைச் சொல்லக்கூடிய வகையில், கலைஞர் கருணாநிதி செய்த முன்னெடுப்புகளைத் தலைப்புச் செய்திகளாக சிலவற்றை மட்டும் நான் இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
· மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பாலம் என்று பெயர் சூட்டினார்.
· காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் 25 லட்சம் மதிப்பிலான அறக்கட்டளை உருவாக்கினார்.
· 2007-ஆம் ஆண்டு பசும்பொன் திருமகனார் நூற்றாண்டு விழாவை, மாபெரும் அரசு விழாவாக கொண்டாடினார்.
· பசும்பொன் திருமகனார் நினைவகத்தில் அணையா விளக்கு அமைத்தது,
· தேவர் இல்லத்தை 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்தது,
· 9 லட்சம் ரூபாய் மதிப்பில் நூற்றாண்டு விழா வளைவு அமைத்தது,
· 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புகைப்படக் கண்காட்சி,
· 4 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலகம்,
· 5 லட்சம் ரூபாய் மதிப்பில் முடி இறக்கும் இடம்,
· 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பால்குட மண்டபம்,
· 5 லட்சம் ரூபாய் மதிப்பில் முளைப்பாரி மண்டபம்
· நினைவகத்தை சுற்றியிருக்கின்ற சாலையை கல் சாலையாக்கியவர் கலைஞர் கருணாநிதி. இப்படி நிறைய செய்து பெருமைப்படுத்தியிருக்கிறார்.
· அதுமட்டுமல்ல, பசும்பொன் திருமகனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பசும்பொன் கிராமத்திற்கு மட்டும், மொத்தமாக 2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகளைச் செய்து கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
· 1989-ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று புது இடஒதுக்கீடு உரிமையை உருவாக்கி, கல்வி - வேலைவாய்ப்பில் இந்தச் சமூக மக்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவரும் கலைஞர்தான்!
· கழக ஆட்சி முதன்முதலாக உருவானபோது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்களுடைய மக்களுக்கான கல்வி மேம்பாட்டிற்காக கல்லூரிகளைத் தொடங்க திட்டமிட்டார்கள். அவை அனைத்திற்கும் அனுமதி வழங்கியவர் கலைஞர்!
அதிலும் குறிப்பாக, முக்குலத்தோர் சமூகம், தாங்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் கல்லூரிகளை அமைக்கத் திட்டமிட்டார்கள். முன்னாள் பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் ‘தேவர் கல்விச் சங்கம்’ உருவாக்கப்பட்டது. அதன் சார்பில், மேலநீலிதநல்லூரில், அமைந்த பசும்பொன் தேவர் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதோடு, 44.94 ஏக்கர் நிலத்தையும் கலைஞர் வழங்கியிருக்கிறார்.
அப்படிப்பட்ட அந்தக் கல்வி நிறுவனம், என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அதைச் சீர்குலைக்கின்ற வகையில் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வட்டாரத்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு வந்தார்கள்.
அப்போது, “ஆட்சி அமைந்ததும் தீர்வு காண்போம்” என்று நான் சொன்னேன். 2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும், அதை மீட்டிருக்கின்றோம். இப்போது, அரசு மேற்பார்வையில் அந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இன்னும் சிறப்பாக நடத்த நிர்வாக ரீதியாக எல்லா உதவிகளையும் நமது திராவிட மாடல் அரசு நிச்சயமாக உதவி செய்யும் என்று அந்த நல்ல செய்தியையும் நான் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வெயில் மற்றும் மழையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், பசும்பொன் திருமகனார் நினைவிடத்தில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை கடந்த ஆண்டு நான்தான் திறந்து வைத்தேன்.
புதிதாக பசும்பொன்னில் ஒரு திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது. அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று இந்த நேரத்தில் நான் உறுதி அளிக்கிறேன்!”
இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அவை பின்வருமாறு;-
“கேள்வி: கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட தேவர் கல்லூரியில் நிருவாகக் குழு அமைப்பது குறித்து…
முதல்-அமைச்சர் பதில்: நடவடிக்கையில் இருக்கிறது. விரைவில் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.
கேள்வி: தேவர் திருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அதிமுக வலியுறுத்தியுள்ளது தொடர்பாக…
முதல்-அமைச்சர் பதில்: அதை நாங்கள் வழிமொழிய காத்துக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி: காவேரி – வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து…
முதல்-அமைச்சர் பதில்: முயற்சியில் ஈடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி: தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாக…
முதல்-அமைச்சர் பதில்: இது உங்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நாடு முழுவதும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பரிசீலனையில் இருக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.