பெண் குரலில் பேசி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
தனியார் திருமண தகவல் மையத்தில் ஆன்லைனில் பார்த்திபனின் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.;
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக தனியார் திருமண தகவல் மையத்தில் ஆன்லைனில் பார்த்திபனின் விவரங்களை பதிவு செய்துள்ளனர். இதனை பார்த்து வாட்ஸ்-அப் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பார்த்திபனிடம் பேசியுள்ளார். பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று அந்த பெண் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பிய பார்த்திபன் பல்வேறு தவணைகளாக ரூ.17 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி பணம் திரும்ப கிடைக்கவில்லை.
இதற்கிடையே அந்த பெண், பார்த்திபனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதில் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பார்த்திபன், அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை கல்குளத்தை சேர்ந்த முகமது அலி மகன் அசார் (36) என்பவர் பெண் போல் பேசி நடித்து பார்த்திபனிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்தது உறுதியானது.
இதையடுத்து அசாரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.