அரசு நிலத்தில் சிலுவையும், சிலையும் வேண்டாம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

நிலம் அரசுக்கு சொந்தமானது எனும்போது, அங்கு சிலுவையும் வேண்டாம், முருகன் சிலையும் வேண்டாம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2025-12-12 07:30 IST

கோப்புப்படம் 

கன்னியாகுமரி மாவட்டம் ஓட்டுக்குழி கிராமத்தை சேர்ந்த சில்வன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் கிராம மலை உச்சியில் இருந்த முருகன் சிலையை அகற்றும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த சிலை அகற்றப்பட்டது. இது சட்டவிரோதம். இந்த சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவ அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் சிலையை மீண்டும் அங்கு வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் முருகன் சிலை 100 ஆண்டுகள் பழமையானது எனக் கூறியிருக்கிறார். ஆனால் 2022-ம் ஆண்டு எடுக்கப்பட்ட டிரோன் வீடியோவில் மலை உச்சியில் முருகன் சிலை இல்லை. இதுதொடர்பான ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலம் யாருக்கு சொந்தமானது? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் வக்கீல், அந்த நிலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்றார். பின்னர் இதுதொடர்பாக மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என அரசு வக்கீல் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், நிலம் அரசுக்கு சொந்தமானது எனும் போது, அங்கு சிலுவையும் வேண்டாம். முருகன் சிலையும் வேண்டாம் என கருத்து தெரிவித்தனர். முடிவில், இதுதொடர்பாக தாக்கலான அனைத்து மனுக்களையும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று கூறி, வழக்கை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்