காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
அரசியல் பிரமுகர் ஒருவர் தலையீட்டின்பேரில் ரகசிய இடத்தில் வாலிபர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண் சென்னையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்லல் அருகே வெற்றியூரில் நடைபெற்ற ஒரு விழாவுக்கு வந்தபோது அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
அந்த வாலிபர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்தார். சென்னையில் இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் ஏற்பாடு செய்தனர்.
உடனே அந்த வாலிபர், சென்னையில் தன்னுடன் வசித்த பெண்ணிடம், நான் ஊருக்கு சென்று எனது பெற்றோரை சமாதானம் செய்து உன்னை முறைப்படி திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டு வந்தார். அதன்பிறகு அவர் மீண்டும் சென்னை செல்லவில்லை.
அந்த வாலிபர், பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் இளம்பெண்ணுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ெசன்னையில் இருந்து உடனடியாக விராலிமலைக்கு வந்து, பெண் வீட்டாரிடம் தனது காதல் குறித்து தெரிவித்து திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபரை சந்திக்க சென்றபோது, அரசியல் பிரமுகர் ஒருவர் தலையீட்டின்பேரில் ரகசிய இடத்தில் அந்த வாலிபர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காதலனை சந்தித்து பேசமுடியாததால் மனம் உடைந்த அந்த இளம்பெண், தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்தி்ரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.