தவெக தலைவர் விஜய்யின் கட்சி சின்னம் இதுவா..? - வெளியான பரபரப்பு தகவல்
சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் இன்னொரு அணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண இருக்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதால், முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டிவருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். முன்னதாக த.வெ.க. கட்சி கடந்த பிப்ரவரி 7-ந் தேதி அன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு என்று தேர்தல் கமிஷன் 184 சின்னங்களை பட்டியலிட்டு வைத்துள்ளது. தேர்தல் கமிஷன் விதிகளின்படி, பதிவு செய்துள்ள புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாங்கள் விரும்பும் 5 முதல் 10 சின்னங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கால அவகாசம் அளித்திருந்தது.
இதன்படி சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில சின்னங்களை குறிப்பிட்டு, அதில் ஒன்றை ஒதுக்க விஜய் தரப்பினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் “மோதிரம் சின்னம்” ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, த.வெ.க. சார்பில் “ஆட்டோ சின்னம்” கேட்கப்பட்டிருந்தது. இந்த சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் என்று சின்னம் கேட்கப்பட்ட நிலையில், " மோதிரம் சின்னம்” த.வெ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தன்னுடைய கட்சிக்கான சின்னத்தை விஜய் அதிகாரப்பூர்வமான அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.