மின்மாற்றிகளை உடைத்து செம்புக்கம்பிகளை திருடும் மர்மகும்பல்
பல கிராமங்களில் இரவு நேரங்களில் சிலர் மின்மாற்றிகளை உடைத்து அதில் உள்ள செம்புக்கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.;
தஞ்சாவூர்,
தமிழகத்தில் விவசாயிகளுக்கு விவசாய பணிகளுக்காக இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தடையின்றி மின்சாரம் உரிய அழுத்தத்தில் கொடுப்பதற்கு வசதியாக மின்மோட்டார்களுக்கு என்று தனியாக ஒரே கம்பத்தில் மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்) அமைத்துள்ளனர்.
ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் பல இடங்களில் பல கிராமங்களில் மின்மோட்டார் மூலமே விவசாயம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள வெள்ளாம்பெரம்பூர், திருவாலம்பொழில் உள்ளிட்ட பல கிராமங்களில் இரவு நேரங்களில் சிலர் மின்மாற்றிகளை உடைத்து அதில் உள்ள செம்புக்கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.
விவசாயிகளின் நலனுக்காக உயர்ந்த நோக்கத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் மின்மாற்றிகளை உடைத்து கீழே வீசி செம்புக்கம்பிகளை திருடுவது தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் தான் செய்ய இயலும் என்று கூறுகின்றனர். மின்மாற்றிகள் உடைக்கப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்க தாமதம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பா சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில் உடைக்கப்பட்ட மின்மாற்றிகளுக்கு பதிலாக புதிய மின் மாற்றி அமைத்து தடையின்றி மின் மோட்டார்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனியும் மின்மாற்றிகள் உடைக்கப்படாமல் தடுக்க இரவு ரோந்து பணியில் போலீசாரை ஈடுபடுத்தி மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.