சாதிய ஆணவ படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - முத்தரசன்
கல்வியும், அறிவும் வளர்ந்தோங்கும் சூழலில் சாதிய ஆணவ படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடி இளைஞர் கவின் படுகொலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தூத்துக்குடி இளைஞர் கவின் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, சாதி ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
படுகொலை செய்யப்பட்ட கவின் சென்னை ஐ.டி. துறையில் பணியாற்றி வருபவர். இவர் திருநெல்வேலி சித்தமருத்துவர் சுபாஷினியை நேசித்துள்ளார். இருவரும் மனம் இசைந்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை ஏற்காத சாதிய ஆதிக்க சக்திகள் 27.07.2025 அன்று கவினை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இன்றைய தொழில்நுட்ப உலகில் கல்வியும், அறிவும் வளர்ந்தோங்கும் சூழலில் இதுபோன்ற படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கிறது. சமத்துவச் சிந்தனைகளை தடுக்கிறது. சமுக பதற்றத்தை அதிகரிக்க செய்கிறது. இது தமிழ் சமூகத்திற்கு பேராபத்தாகும். சாதிய ஆணவ படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.