மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயில் மோதி பலத்த காயம்

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்தார்.;

Update:2025-06-30 19:23 IST

மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட ரெயிலானது இன்று மதியம் 3 மணியளவில் மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் நாகர்கோவில் செல்வதற்காக புறப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராணி என்கிற 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது ஐதராபாத்திலிருந்து வந்த விரைவு ரெயில் அவர் மீது மோதியது. பின்னர் உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த பயணிகள், ரெயில்வே போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் அந்தப் பெண்ணை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்