சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பஸ் சேவை
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதல் முறையாக ஏ.சி. மின்சார பஸ் சேவை இன்று முதல் தொடங்குகிறது.;
சென்னை,
தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். மின்சார பஸ்களின் சேவையானது, வியாசர்பாடி பணிமனை தவிர பெரும்பாக்கம், பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி பணிமனைகளில் இருந்தும் வழங்கப்பட இருக்கிறது.
அதன்படி, பெரும்பாக்கம் மின்சார பஸ் பணிமனையை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபுசங்கர், அதிகாரிகளுடன் கடந்த 6-ந் தேதி பணிமனையில் ஆய்வு செய்தார். இந்த நிலையில், ஆகஸ்டு 11-ந் தேதி (இன்று) முதல் மின்சார ஏ.சி. பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.49.56 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பெரும்பாக்கம் பணிமனையை இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்து, அங்கிருந்து 55 மின்சார ஏ.சி. பஸ்களின் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.
பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து ரூ.233 கோடி மதிப்பீட்டில் 55 மின்சார ஏ.சி. பஸ்கள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் என மொத்தம் 135 மின்சார பஸ்களின் சேவைகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இயக்கப்பட உள்ள மின்சார ஏ.சி. பஸ்கள் என்பது அரசு போக்குவரத்துக் கழகங்களில் முதல் முறையாக இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.