நடிகை கொல்லங்குடி கருப்பாயி மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-14 17:22 IST

சென்னை,

மதுரை-தொண்டி சாலை, கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.வயல் வெளியில் ஒலித்த கிராமிய பாட்டு அகில இந்திய வானொலி வாயிலாக ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஒலித்தது.

ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயிசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார். பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் ஒடுங்கிப்போனார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வின் காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 99. மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த நடிகைக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

1993-ஆம் ஆண்டு இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரிய நடிகை கொல்லங்குடி கருப்பாயி அவர்கள், 'ஆண் பாவம்', 'கோபாலா கோபாலா', 'ஆயுசு நூறு' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்கலை நிகழ்த்துனராகப் பணியாற்றி உள்ளதோடு, பல்வேறு நாட்டுப்புற பாடல்களைப் பாடி அனைவரது பாராட்டையும், பேரன்பையும் பெற்றவர்.

நடிகை கொல்லங்குடி கருப்பாயி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்