நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பிய அடவிநயினார் அணை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டாற்று வெள்ளம் தாமிரபரணியில் கலந்து ஓடுகிறது.;

Update:2025-11-21 12:12 IST

தென்காசி,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் மலையடிவார பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் குண்டாறு தொடர்ந்து நிரம்பி வழிகிறது. மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டாற்று வெள்ளம் தாமிரபரணியில் கலந்து ஓடுகிறது. மேலும் ஊர்ப்பகுதிகளில் பெய்த மழை தண்ணீரும் ஆற்றில் கலந்து செல்கிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேக்கரை பகுதியில் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது. இந்த அணை மூலம் சுமார் 72 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றது. அதுபோல் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கின்றது.

இந்த அணை நடப்பாண்டில் ஏற்கனவே 5 முறை தனது முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழிந்தது. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மீண்டும் அணை நிரம்பியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அணையானது 6-வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அங்குள்ள தலையணையில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) ஸ்ரீகாந்த் உத்தரவின்பேரில், மறுஉத்தரவு வரும் வரை தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்