பாஜகவுக்குச் சாமரம் வீசுவதற்காகவே எஸ்.ஐ.ஆரை அதிமுக வரவேற்றுள்ளது: திமுக விமர்சனம்
தகுதியான ஒரு வாக்காளர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்று என்.ஆர்.இளங்கோ கூறினார்.;
சென்னை,
பாஜகவுக்கு சாமரம் வீசவேண்டும் என்ற நோக்கத்திற்காக SIR-ஐ அதிமுக வரவேற்றுள்ளது என்று திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த என்.ஆர். இளங்கோ கூறியதாவது: திமுக எப்போதும் நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது; 2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்
எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டான, திமுகவின் பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கணக்கீட்டுப் படிவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி .பிஎல்ஏ2-க்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் மட்டுமே நியமிக்கப்பட முடியும். நியமனம் செய்யப்பட்ட பிஎல்ஏ2-க்களுடைய பட்டியலைத் தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிடும். இந்த பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் பிஎல்ஓ-க்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய தகுதி பெற்றவர்கள். எஸ்ஐஆரை பொறுத்தவரை, ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுடைய பிஎல்ஏ2 ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டுப் படிவங்கள் வரை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது.
மேலும், அதிமுகவினர், எஸ்ஐஆர்-ஐ வரவேற்றுப் பேசியது, அதில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே. எஸ்ஐஆர் நிறைவேற்றத் தொடங்கிய பிறகே, பொதுமக்களுடைய வாக்குகளைப் பறிக்கக்கூடிய வகையில் இது இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து, தங்கள் கட்சி எடுத்த நிலை தவறு என்று அறிந்திருக்கிறார்கள். அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவரே, தன்னுடைய கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தருவதற்கு, திமுகவின் பிஎல்ஏ-க்கள் தான் உதவி செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தன்னுடைய இணையதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது முறையற்ற வகையில் செய்யக்கூடிய இந்த எஸ்ஐஆர்-ஐ தான் திமுக எதிர்க்கிறது . படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை; இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து. அசாமில் எஸ்ஐஆர் கொண்டு வந்தபோது, தேர்தல் ஆணைய அலுவலர்களே எல்லா கணக்கீட்டுப் படிவங்களையும் பூர்த்தி செய்து கொள்வார்கள் என்றும், வாக்காளர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டுக்கும் அசாமுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்? 12 மாநிலங்களுக்கும் அசாமுக்கும் ஏன் இந்த வித்தியாசம் காட்டுகிறீர்கள்” இவ்வாறு அவர் பேசினார்.