காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல்

தனிப்படை காவலர்கள் 6 பேருக்கும் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.;

Update:2025-09-21 21:28 IST

மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20-ந்தேதி ஆன்லைன் வழியாக சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனிடையே, சி.பி.ஐ. தாக்கல் செய்த முதற்கட்ட குற்றப் பத்திரிகையில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அந்த குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தலைமை குற்றவியல் நீதிபதி செல்வபாண்டி முன் மீண்டும் வந்தது. அப்போது சிறையில் உள்ள 5 தனிப்படை காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டிரைவர் ராமச்சந்திரனும் நீதிபதி முன் ஆஜரானார். சி.பி.ஐ. தரப்பில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தனிப்படை காவலர்கள் 6 பேருக்கும் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் 6 பேருக்கும் குற்றப் பத்திரிகையை படித்து பார்க்க அவகாசம் வழங்கி அடுத்த விசாரணையை வரும் 23-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்