அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்-ஓ.பன்னீர்செல்வம்

அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.;

Update:2025-03-08 13:00 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தொழிலாளர் உரிமைகளையும், அவர்களின் நலனையும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கின்றோமோ, அவ்வளக்கவ்வளவு விரிந்த அளவில் தொழில் வளம் பெருகும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தொழிலாளர்கள் என்றால், தொழிற்சாலைகளில் வேலை புரிபவர்கள் மட்டும் தொழிலாளர்கள் அல்ல. அரசாங்கம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பணிபுரிபவர்களும் தொழிலாளர்களே.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மக்களுக்கு இலவச மருத்துவச் சேவையை அளிப்பதிலும், அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதிலும், மாணவ, மாணவியருக்கு கல்வியைப் போதிப்பதிலும் பெரும் பங்காற்றுபவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்தான்.

ஜனநாயக நாட்டில், அரக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துகின்ற உரிமை உண்டு. ஆனால், அந்தப் போராடுகின்ற உரிமையையும் பறிக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கி வருகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரக வளாகங்களுக்குள் அறப் போராட்டம் நடத்துவதும், உண்ணாவிரதம் இருப்பதும், உரையாற்றுவதும் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை இது ஜனநாயகத்தின் ஓர் அங்கம். இந்த ஜனநாயக உரிமையை சிதைக்கும் வகையில், அரசு அலுவலக வளாகங்களிலோ, அதையொட்டியோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊர்வலம் செல்லக்கூடாது. கூட்டம் நடத்தக்கூடாது. உரையாற்றக்கூடாது என்ற வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் புதிய திருத்தங்களை தி.மு.க. அரசு மேற்கொண்டுள்ளதாக வந்துள்ள தகவல் பேரதிர்ச்சியை அளிக்கிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டபோது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்களில் அந்த இடத்திற்கே சென்று ஆதரவுக் கரம் நீட்டியவர் தற்போதைய முதல்-அமைச்சர் அவர்கள். இதுபோன்று ஆதரவுக் கரம் நீட்டி, அவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், அவர்களை போராடவேக் கூடாது என்று சொல்வது ஜனநாயக நடைமுறைக்கு எதிரான செயல், அடக்கு முறையின் வெளிப்பாடு.

இதுபோன்ற சொல்லாத வாக்குறுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் 99 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டதாக முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார் போலும் முதல்-அமைச்சர் அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது. ஒரு வேளை எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் செய்தவற்றை எல்லாம் மறந்துவிட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் திராவிட மாடல் அரசு என்றால், மக்கள் விரோத அரசு என்பதை தங்களது செயல்பாட்டின் மூலம் தி.மு.க. அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு வளாகங்களில் தான் போராட முடியுமே தவிர, வேறு இடங்களில் போராட முடியாது. இதுதான் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இந்த முறையை மாற்றுவது என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு உண்மையாகவே இருக்குமானால், அண்மையில் தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலிபுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்