15-ந்தேதி விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்

அமெரிக்கா உரிமம் பெற்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோளாகும்.;

Update:2025-12-12 09:23 IST

சென்னை,

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்- 6' என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.

இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டான எல்.வி.எம்-3 மூலம் விண்ணில் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) ஏவ திட்டமிட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் கடந்த அக்டோபர் 19-ந்தேதி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு ராக்கெட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அது ஏவுதளத்திற்கு நகர்த்தப்படுவதற்கு முன்பு சில முக்கிய சோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த செயற்கைக்கோள் புளுபேர்ட் 1 முதல் 5 வரையிலான செயற்கைக்கோளை விட 3.5 மடங்கு பெரியது. அத்துடன் தரவுத் திறனும் அதனை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். குறைந்த பூமி சுற்றுப்பாதையில் இதுவரை செலுத்தப்பட்ட மிகப்பெரிய தனியார் கட்டமைத்த, செல்போன்-இணக்கமான ஆண்டெனாவாக செயல்படும்.

அமெரிக்கா உரிமம் பெற்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோளாகும். இது வணிக மற்றும் அரசு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2026-ம் ஆண்டு முதல் காலாண்டின் இறுதிக்குள் மேலும் 5 செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டவுடன், இந்த செயற்கைக்கோள் அமெரிக்கா மற்றும் சில சந்தைகளில் தொடர்ச்சியான செல்லுலார் பிராட்பேண்ட் சேவையை அளிக்கும். ஸ்மார்ட்போன்களால் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய முதல் மற்றும் ஒரே விண்வெளி அடிப்படையிலான செல்லுலார் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை இந்த செயற்கைக்கோள் இயக்கும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்