15-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போதைய நிலையில் நான்குமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று உள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இது தவிர விஜய்யின், த.வெ.க. தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனி அணியாகவும் போட்டியிட உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியும், தே.மு.தி.க. மற்றும் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வும் தங்கள் நிலையை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த கூட்டணி நிலைப்பாடு மாறுதலுக்கு உட்பட்டது. எந்த கட்சி, யாருடன் கூட்டணி சேருவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.
அ.தி.மு.க. தனது கூட்டணிக்குள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. அதேவேளையில், இப்போது கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அந்த கட்சியினர் இடையே ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
மேலும் கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.