சென்னை கூவம் ஆற்றில் கிடந்த ஆந்திர இளைஞர் சடலம்: பவன் கல்யாண் கட்சி நிர்வாகி கைது- திடுக் தகவல்
ஆந்திராவில் கொலை செய்து உடலை காரில் கொண்டு வந்து சென்னை கூவம் ஆற்றில் வீசிய பவன் கல்யாண் கட்சி பிரமுகர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள னர்.;
பெரம்பூர்,
சென்னை கூவம் ஆற்றின் அருகே கடந்த செவ்வாய்க்கிழமையில் இளைஞரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சென்னை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக சடலம் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதுதொடர்பாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சென்னை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, காரில் வந்த சிலர் சடலத்தை வீசிச் சென்றது தெரிய வந்தது.சிசிடிவி காட்சியில் பதிவான கார் பதிவெண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணயில், காரில் வந்தவர்கள் பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது, கூவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ஸ்ரீகாளகஸ்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு என்கிற ராயுடு (வயது 22) என்பதும், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியை சேர்ந்த பிரதிநிதி சந்திரபாபு வீட்டில் வேலைக்காரராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய புலன் விசாரணையில் இந்த வழக்கில் சந்திரபாபு (35), அவரது மனைவி வினுதா கோட்டா (31), ஜனசேனா கட்சி தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சிவகுமார் (36), கோபி (24), ரேணிகுண்டாவை சேர்ந்த கார் டிரைவர் ஷேக் தாசர் (23) ஆகிய 5 பேரை திருத்தணி பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ராயுடுவை கொன்று, கூவம் ஆற்றில் வீசியது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-கொலையான ராயுடு, இந்த வழக்கில் கைதாகி உள்ள சந்திரபாபு வீட்டில் வேலைக்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சந்திரபாபுவின் மனைவி வினுதா கோட்டா உடை மாற்றும்போது செல்போனில் படம் எடுத்து உள்ளார்.
இதனை அறிந்த சந்திரபாபு, ராயுடுவிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பஜாலா சுதீர் ரெட்டியின் ஆதரவாளரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வினுதா கோட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோவை அனுப்பியது தெரிய வந்துள்ளது.
இதனை கேட்டு சந்திரபாபு முதலில் ஆத்திரமடைந்தாலும் கட்சியின் கட்டுப்பாட்டை கருதி ராயுடுவை கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி எச்சரித்து அவரது பாட்டி ராஜேஸ்வரி (60) வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். எனினும் தனது மனைவியின் அந்தரங்க படங்களை அனுப்பிய நாயுடு மீது சந்திரபாபுக்கு அவ்வப்போது கொலைவெறி ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், பாட்டி வீட்டில் இருந்து ராயுடுவை சந்திரபாபு மீண்டும் அழைத்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராயுடுவை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்ததால் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சந்திரபாபு எண்ணியுள்ளார். இந்த நிலையில்தான், சந்திரபாபுவின் மாமனார் பாஸ்கர் ரெட்டி சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கு காரில் செல்ல இருக்கும் தகவல் அவருக்கு கிடைத்துள்ளது.
இதனால், யாருக்கும் தெரியாமல் ராயுடுவின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு சென்னை ஏழு கிணறு பகுதியில் உடலை கூவம் ஆற்றின் ஓரமாக உடலை வீசி சென்றுள்ளனர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் கூண்டோடு அனைவரும் சிக்கிக் கொண்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.