‘கேட் 2026' நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி ஆகும்.;
சென்னை,
ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான ‘கேட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.
இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் பெரும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, ‘கேட் 2026' நுழைவுத்தேர்வு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் தேர்வை தேர்வு செய்து எழுதலாம்.
இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுத முடியும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.