மக்களை ஏமாற்றுவதில் திமுகவும், பாஜகவும் ஒரே வகையறா - தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு
திருச்சி பரப்புரையை நிறைவு செய்த தவெக தலைவர் விஜய் அரியலூர் சென்றடைந்தார்.;
திருச்சி பரப்புரையை நிறைவு செய்த தவெக தலைவர் விஜய் அரியலூர் சென்றடைந்தார். அரியலூரில் அண்ணா சிலை முன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் அவர் பேசியதாவது,
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. ஜனநாயக படுகொலை முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
திருச்சியில் மைக் பிரச்சினை இருந்ததால் அங்கு பேசிய ஒருசில விஷயத்தை மீண்டும் சொல்ல நினைக்கிறேன். அந்த காலத்தில் போருக்கு முன் குலதெய்வ கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனநாயக போருக்கு முன் மக்களாகிய உங்களை பார்த்து செல்ல வந்துள்ளேன். உங்களுடைய இந்த அன்புக்காக, எவ்வளவு பெயர் உயரத்தையும், வசதியையும், வருமானத்தையும் தூக்கி எரிந்து வரலாம். உங்கள் அன்பு, பாசத்தை விட உலகில் எனக்கு எதுவுமே பெரிதல்ல. உங்கள் வீட்டில் ஒருவனாக உறவினனாக என்னை ஆக்கியுள்ளனர்.
என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவிற்கு பார்த்தாச்சு... அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அந்த கொஞ்சம் கூட அவசியமில்லை. எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைவிட வேறு எந்த எண்ணமும் வேலையும் எனக்கு இல்லை.
என்னடா இந்த விஜி தனி ஆளாக இருப்பான் என்று பார்த்தால் எப்போதும் மக்கள் கடலோடு இருக்கிறானே என்றும் நம் எதிரிகளுக்கு தெரிந்துவிட்டதால் கண்ணாபின்னா என பேசுகிறார்கள். நான் மரியாதையாக பேசினால்கூட தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் அறிஞர் அண்ணான் சொன்னதுபோல வாழ்க வசவாளர்கள் என சொல்லி சென்றுவிட வேண்டியதுதான்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலேயே இல்லை. அங்கு வாக்கு திருட்டு நடந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் வைத்து ஒரே நேரத்தில் தில்லுமுல்லு செய்ய பாஜக நினைக்கின்றது. இது ஜனநாயக படுகொலை. தொகுதி மறுசீராய்வு என்ற பெயரில் வட இந்தியாவுக்கு மட்டும் அதிக தொகுதிகள் கிடைக்கும்படி மோசடி செய்கிறார்கள். தென் இந்தியாவின் சக்தியை குறைக்க செய்யபடும் மோசடி வேலை இது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பாஜக அரசு செய்யும் துரோகம் இது. தவெக இது எல்லாவற்றையும் எதிர்க்கிறது.
நான், நீங்கள் என அனைவரும் தான் திமுகவை தேர்ந்தெடுத்தோம். நல்லது செவார்கள் என நினைத்தே திமுகவுக்கு வாக்களித்தோம். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாக திமுக மக்களை ஏமாற்றுகிறது.
என்ன கேள்வி கேட்டாலும் திமுக அரசிடம் இருந்து பதில் வரப்போவதில்லை. பாஜக செய்வது துரோகம் என்றால் திமுக செய்வது நம்பிக்கை மோசடி. மக்களை ஏமாற்றுவதில் திமுகவும், பாஜகவும் ஒரே வகையறா
என்றார்.