சென்னை தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் மீட்பு

ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் 6 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.;

Update:2025-11-16 06:42 IST

சென்னை,

சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை ராமச்சந்திரா தெருவில் உள்ள மங்கள வில்லா என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசிப்பவர் கிரிதர். இவரது வீட்டின் பூஜை அறை நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே கிரிதர் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்தப்படி வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினார்கள். இந்தநிலையில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அனல்காற்றுடன் கரும்புகை சூழ்ந்தது.

Advertising
Advertising

இதனால் 3-வது தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், பதற்றத்துடன் மொட்டை மாடிக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். மொட்டை மாடியில் இருந்த 6 பேர் 'ஸ்கை லிப்ட்' வாகனம் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தின் போது 3-வது தளத்தின் பின்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் டாக்டர் வரதராஜன் (வயது 72) மற்றும் அவரது மனைவி மலர் ஆகியோர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் இரும்பு கேட்டை உடைத்து மீட்டனர். மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர்கள் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்