தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.;
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு நேற்று விமானம் வந்தது. அந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 30 வயதான இளைஞரின் சூட்கேசை பரிசோதித்தனர். அந்த சூட்கேசில் 3 கிலோ உயர் ரக கஞ்சா இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இளைஞரை போலீசில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கஞ்சாவை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார்? கஞ்சா கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.