அரியலூர்: சித்தேரி வரத்து வாய்க்காலில் தேங்கிய அமலை செடிகள் அகற்றம்
அரியலூர் நகரில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றாக சித்தேரி திகழ்ந்து வருகிறது.;
அரியலூர் நகரில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றாக சித்தேரி திகழ்ந்து வருகிறது. நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த ஏரி முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக சித்தேரிக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வரத்து வாய்க்கால் முழுவதும் குப்பைகளாலும், அமலை செடிகளாலும் அடைபட்டிருந்தது. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் வராமல் தேங்கும் நிலை ஏற்பட்டது. மேலும், இந்த வாய்க்காலில் கழிவுநீரும் கலந்து வந்ததால் தண்ணீர் அசுத்தமாகி வருவதாக கடந்த 23ம் தேதி `தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி சித்தேரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் உள்ள குப்பைகள் மற்றும் அதன் அருகேயுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. அதேபோல், வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமித்திருந்த அமலை செடிகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பணியாளர்கள் அகற்றினர். மேலும் நகரில் உள்ள மற்றொரு முக்கிய ஏரியான செட்டி ஏரியின் வரத்து வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பைகளையும் அகற்றினர். இதையடுத்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்தனர்.