"கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்வது தேவையற்றது.." - கே.எஸ்.அழகிரி
யாருமே எதிர்பாராத அளவிற்கு அதிக கூட்டம் என்பதால் விபத்து ஏற்பட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.;
விழுப்புரம்,
வாக்கு திருட்டை தடுக்க தவறிய இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜனதா அரசை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள காமராஜர் சிலை அருகில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம், அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், திருக்கோவிலூா் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ.ஆர். வாசிம் ராஜா, நகரமன்ற கவுன்சிலர்கள் இம்ரான்கான், சுரேஷ்ராம், மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கே.எஸ்.அழகிரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 9 ஆண்டுகளாக வரி குறைப்பு செய்யாத மோடி அரசு இப்போது தேர்தலுக்காக வரியை குறைத்துள்ளது. 9 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடியை வரியாக பெற்றுவிட்டு இப்போது ரூ.2½ லட்சம் கோடியை தீபாவளி பரிசாக வழங்குகிறோம் என்கிறார்கள்.
கரூரில் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததில் விஜய்யை கைது செய்வதென்பது தேவையற்றது. அவர் கைது செய்யப்பட்டால் தவறான செயல்பாடாகும். 4 புறத்திலும் தவறு உள்ளது. இச்சம்பவத்தில் செந்தில்பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது தவறானது. கரூரில் யாருமே எதிர்பாராத அளவிற்கு அதிக கூட்டம் என்பதால் விபத்து ஏற்பட்டது. விஜய் தாமதமாக வந்தார் என்பது சும்மா. விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறுகிறார். கரூர் சம்பவத்தில் முதல்-அமைச்சர் நிதானமாக செயல்படுகிறார். இருப்பினும் இதுபோன்ற கருத்துக்கள் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.