பா.ம.க மாவட்ட செயலாளர் கொலை முயற்சி: விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்
பொது நலனுக்கு போராட கூடியவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலைமை வேதனை அளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் அட்டவணை 9-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாகும். அதன்படி ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்று நேரம் காலம் கருதாமல், அனைத்து நாட்களிலும் மக்கள் பணியாற்றுபவர் ம.க.ஸ்டாலின். பொறுப்பு மிக்க அப்பதவியில் இருக்கும் அவரை , கடந்த 5-ம் தேதி, பேரூராட்சி மன்ற அலுவலகத்தில், அவர் தனது பணியை செய்து கொண்டிருந்த நேரத்தில், பட்டப் பகலில், அரசு அலுவலகத்திற்கு உள்ளே புகுந்த முகமூடி அணிந்த கூலிப்படை கும்பல் அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கூலிப்படை கும்பல் ஒரு வாரத்திற்கு முன்பே அவர்கள் வகுத்த திட்டத்தை நிறைவேற்ற பல கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பயன்படுத்தி ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயற்சி செய்தது, அந்த பகுதி சிசிடிவி பதிவு காட்சி மூலம் தெரிய வருகிறது, இவற்றை காவல்துறையும், உளவுத்துறையும் அறியாமல் அலட்சியமாக இருந்தது ஐயத்தை எழுப்பியுள்ளது. இந்த தாக்குதலில் ம.க.ஸ்டாலின் சாதுரியமாக உயிர் தப்பியுள்ளார். அதேசமயம் அவரது வாகன ஓட்டுனர் அருண், கட்சி பொறுப்பாளர் களம்பரம் இளையராஜா ஆகியோர் கூலிபடையினரால் வெட்டுப்பட்டு காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்று ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும் இதில் தொடர்புடைய மொத்த கும்பலையும், பின்புலமாக இருந்தவர்களையும் முழுமையாக கைது செய்யாமல் ஒரு சிலரை மட்டும் காவல்துறை கைது செய்து உள்ளது காவல்துறையின் மெத்தன போக்கை காட்டுகிறது. இந்த வழக்கில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் காவல்துறை விசாரணை நடத்தி வருவதால் சில குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
ம.க.ஸ்டாலின் அந்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு போராடி வரக்கூடிய ஒரு போராளி, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்றும், மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றவும், அப்பகுதியில் நடைபெறும் கனிமவள கொள்ளைகளை தடுக்கவும் போராடி வருகிறார். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், எடக்குடி கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை வளமாக, நினைவுச்சின்னம் போல் மலை போல் குவிந்து காட்சியளிக்கும் மணல் மலையை இயந்திரங்களைக் கொண்டு கொள்ளை அடிக்க சிலர் முயன்ற போது அதனை எதிர்த்து போராடியவர். இதனால் பாதிக்கப்பட்ட மணல் மாபியா கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாமா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா என்ற கோணத்திலும் விசாரனை இருக்க வேண்டும்.
மக்களோடு இணைந்து பணியாற்றக் கூடிய மக்கள் பிரதிநிதிக்கு, பொது நலனுக்கு போராட கூடியவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலைமை வேதனை அளிக்கிறது. இது பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் .
இந்தப் படுபாதக செயலுக்கான சதித் திட்டம் அரங்கேற்றிய நபர்கள் யார் என்பதை உடனே துரித விசாரணையின் மூலம் கண்டறியப்பட வேண்டும். இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்பதை அறிந்து அலட்சியமாக இருந்த காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக முழுமையாக இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
ம.க.ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றும் தொண்டர்களுக்கும் காவல்துறையை கொண்டு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் இதன் பிறகு இது போன்ற அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் கூலிப்படை கொண்டு தாக்கும் சம்பவங்கள் எங்கும் நடைபெறதா அளவிற்கு காவல் துறையும், உளவுத்துறையும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.