சென்னையில் சட்டவிரோத கட்டிடங்களை அதிகாரிகள் கண்காணிப்பது இல்லை: ஐகோர்ட்டு கருத்து

சென்னையில் சட்டவிரோத கட்டிடங்களை அதிகாரிகள் கண்காணிப்பது இல்லை என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.;

Update:2026-01-06 00:34 IST

சென்னை,

சென்னை ஜார்ஜ் டவுண் அய்யா முதலித் தெருவில் பிரமிளா என்பவர் வீடு கட்ட முடியாத வகையில், அவர் இடத்துக்கு செல்லும் சாலையை பலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டும் அகற்றப்படவில்லை. இதையடுத்து அவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. எனவே, இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை எதிர்மனுதாரர்களாக தாமாக சேர்க்கிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், “ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்'' என்றார். அரசு தரப்பில், இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கண்காணி்த்து நடவடிக்கை எடுப்பதில்லை. தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்கமுடியும'' என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்