பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகல்; டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

கூட்டணியை பற்றி டிசம்பரில் அறிவிப்போம் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-09-03 21:39 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட உள்ளன.

இதேபோன்று, நாம் தமிழர், த.வெ.க. ஆகிய இரு கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், கட்சிகள் கூட்டணி அமைப்பது, கூட்டணியில் நீடிப்பதில் அவ்வப்போது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதன்படி, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து கடந்த ஜூலை 31-ந்தேதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விலகினார்.

இதற்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறும்போது, ஆலோசனையில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றார்.

எதிர்கால கூட்டணி குறித்து காலசூழலுக்கு ஏற்ப முடிவு மேற்கொள்ளப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த அ.ம.மு.க. இன்று விலகி உள்ளது. அக்கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்த நிலையில், கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளது.

இதுபற்றி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறும்போது, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. அதற்கேற்ப பா.ஜ.க. செயல்படுகிறது என கூறியுள்ளார்.

அ.தி.மு.க. ஒன்றாக இணைய முயற்சி எடுத்த மத்திய மந்திரி அமித்ஷாவின் திட்டம் தோல்வியடைந்தது. கூட்டணியை பற்றி டிசம்பரில் அறிவிப்போம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்