பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.;

Update:2025-08-25 16:02 IST

இந்திய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இதில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தெலுங்கானாவை சேர்ந்த ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதில், இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நேற்று சென்னைக்கு வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து சென்ற நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனும் தமிழகம் வர இருக்கிறார்.

வருகிற 27-ந்தேதி (நாளை மறுநாள்) விநாயகர் சதுர்த்தி அன்று சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வர இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது 3-வது கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். 4-வது கட்ட சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 1-ந்தேதி அவர் தொடங்க இருக்கும் நிலையில், இடைப்பட்ட நேரத்தில் அவரை சந்தித்து ஆதரவு திரட்டும் திட்டத்துடன் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருவதாக கூறப்படுகிறது.

இந்த பயணத் திட்டம் 2 நாட்கள் இருக்கும் என்றும், எந்தெந்த தலைவர்களை எப்போது சந்திப்பது என்பது குறித்து திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்