விசாரணையின்போது சிறுவன் மரணம்; 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை - மதுரை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
காயங்களை மறைக்க முயன்ற அரசு மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;
மதுரை,
கடந்த 2019-ம் ஆண்டு, மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயாவின் மூத்த மகன் முத்து கார்த்திக்(வயது 17), என்ற சிறுவனை குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின்போது போலீசார் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் முத்து கார்த்திக், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தனது மகனின் மரணத்திற்கு காரணமாக எஸ்.எஸ்.காலனி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ், காவலர்கள் சதீஷ், ரவி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 காவலர்களுக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த வழக்கில், சாட்சிகளை அழிக்க முயன்ற காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனையின்போது உடலில் இருந்த காயங்களை மறைக்க முயன்ற அரசு மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.