வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய வி.ஏ.ஓ
செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்..;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்முடியனூரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 35). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு அதே ஊர் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதியிடம் (40) விண்ணப்பித்தார்.அப்போது பிரவீனிடம் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி, ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் லஞ்சம் ெகாடுக்க விரும்பாத பிரவீன் அது குறித்து திருவண்ணாமலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரவீன்குமாரிடம் வழங்கினர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனையின் பேரில், இந்த ரூபாய் நோட்டுக்களை மேல்முடியனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் பிரவீன்குமார் வழங்கினார். அப்போது இந்த நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குணாநிதி மற்றும் உடனிருந்த உதவியாளர் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.