கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த கார்: 5 பேரின் நிலை என்ன?
ஜோலார்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சென்ற கார் ஏரிக்குள் பாய்ந்தது.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவரது மனைவி காளியம்மாள், இவர்களின் மகள் நந்தினி, மருமகன் அரவிந்த், இவர்களின் உறவினர் மகள் 8 வயது சிறுமி என 5 பேர் அரவிந்த்துக்கு சொந்தமான காரில் ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரி மலை கிராமத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.
காரை அரவிந்த் ஓட்டி உள்ளார். ஏலகிரியில் உள்ள ஏரிக்கரையின் மீது கார் சென்று கொண்டிருந்தது. தற்போது பெய்துவரும் மழை காரணாக ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் திடீரென கார் நிலைத்தடுமாறி ஏரிக்குள் பாய்ந்தது. தண்ணீர் அதிகமாக இருந்ததால் கார் கண்ணாடி வரை தண்ணீரில் மூழ்கியது.
உடனே அரவிந்த், கதவை திறந்துகொண்டு வெளியே வந்து தனது மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்றி கரை சேர்த்தார். பின்னர் மாமனார் மற்றும் மாமியாரையும் கரை சேர்த்தார். இதில் ராஜா காயம் அடைந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்தனர். பின்னர் அதில் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
ஏரியில் கார் பாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.