நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: எல்.முருகன் பேட்டி
சி.பி.ஐ. வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்;
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது,
எப்போதெல்லாம் தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் சில திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவது தி.மு.க.வின் வாடிக்கை. அப்படிதான் தற்போது சிறப்பு வாக்காளர் திருத்த முகாமை தி.மு.க. எதிர்க்கிறது. கிட்டத்தட்ட 75 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக மூத்த அரசியல் தலைவரான வைகோ கூட தெரிவித்துள்ளார்.
இரட்டைப்பதிவு, இறந்துபோன ஆட்கள் என போலி வாக்காளரை களைவதே இத்திட்டத்தின் நோக்கம். அப்படித்தான் பீகாரில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு, கிட்டத்தட்ட 6 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தகுதியான ஒரு வாக்காளர் பெயர் கூட நீக்கப்படக்கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் உறுதியாக இருக்கிறது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதும், 2,538 இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறார்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இளைஞர்களின் கோபம் தி.மு.க. மீது திரும்பியுள்ளது.
இதை திசை திருப்பவே இந்த சிறப்பு வாக்காளர் திருத்த பணியை தி.மு.க. எதிர்க்கிறது. இந்த ஊழலை தமிழக காவல்துறை விசாரிப்பதை விட சி.பி.ஐ. விசாரிப்பது சிறப்பாக இருக்கும். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல நெல் கொள்முதலில் கூட ஊழல் நடந்திருக்கிறது. அந்தவகையில் கிட்டத்தட்ட ரூ.160 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு முறையான தேர்தலை நடத்த சரியான வாக்காளர் பட்டியல் அவசியம் என்று கூறுவது தவறா?. இது காலத்தின் கட்டாயம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவது கடமையும் கூட. அதேபோல சிறுபான்மை மக்கள் நீக்கப்பட போகிறார்கள் என்பதெல்லாம் சொல்வது தவறு. இதிலும் அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.