மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் - ஜி.கே.வாசன்

மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;

Update:2025-09-13 12:13 IST

கோப்புப்படம்

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதி மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. நேற்று முன்தினம் வேளாங்கண்ணி அருகில் உள்ள செருதூர் மீனவக்கிராமத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில் 3 பைபர் படகுகளில் சென்ற 12 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது நேற்று அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மீனவர்கள் பலர் படுகாயமடைந்தும், சிலர் காயமடைந்தும் கரை திரும்பிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மீனவர்களின் வலை, ஜிபிஎஸ் கருவி, எஞ்சின், மொபைல் போன்கள், மீன்கள் உள்ளிட்ட சுமார் 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றனர் கடற்கொள்ளையர்கள். வன்முறையில் ஈடுபடுவது கடற்கொள்ளையர்களின் வழக்கமாகிவிட்டது. இதனால் தமிழக மீனவர்களின் உடலுக்கும், உடமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற அவ்வப்போது கடற்கொள்ளையர்களின் தாக்குதலால் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இது போன்ற தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது கவலையளிக்கிறது. மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை கண்டிப்போடு தெரிவித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

தமிழக அரசு சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க, விரைவில் குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்